பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான விசாரணைகள் தொடர்பில் நான்கு தொலைபேசிகளின் பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்று நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல பொரளை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பொரளை பொலிஸார் நேற்று (20) விடுத்த கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னரே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொலைசெய்யப்பட்ட தினேஸ் ஷாப்டரின் மனைவி மற்றும் அவரது நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக பொரளை பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி உண்மைகளை தெரிவிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இதேவேளை, பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டர், பொரளை மயானத்திற்கு அழைத்து வரப்பட்டு அவரது நெருங்கிய உறவினர் ஒருவரின் திட்டத்திற்கமைய கொலை செய்யப்பட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் என சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது