கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கிய சொகுசு வாகனத்தின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிமன்றத்தினால் தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் நண்பகலுக்குள் கொள்ளுப்பிட்டி பொலிஸில் ஆஜராகுமாறு அந்த நபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை நீதிமன்றம் முடக்கியுள்ள நிலையில், அவருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
தனிநபர் உரிமம் மற்றும் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு 2023 பெப்ரவரி 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதியின் மூன்று பிள்ளைகளுக்கு 1.5 மில்லியன் ரூபாவை சந்தேகநபர் கையளித்துள்ளார்.
குறித்த நபர் கடந்த 12ஆம் திகதி டுபாயிலிருந்து நாடு திரும்பிய பின்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய நபர் குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விபத்தைத் தொடர்ந்து, சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய காரின் சாரதி, அன்றைய தினம் காலை 9.55 மணியளவில் நாட்டை விட்டு துபாய்க்கு புறப்பட்டார்.
கொள்ளுப்பிட்டியில் உள்ள வீதியொன்றின் ஊடாக காலி முகத்திடலை நோக்கி பயணித்த கார், அதே திசையில் பயணித்த முச்சக்கர வண்டியின் மீது மோதியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கஹதுடுவ, பொல்கசோவிட்ட பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டியின் சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
விபத்தின் போது காரில் நான்கு பயணிகள் இருந்த நிலையில் காரின் சாரதி அங்கிருந்து தப்பியோடினார்.
இரவு விடுதியொன்றில் விருந்து வைத்துவிட்டு இந்தக் குழுவினர் திரும்பிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.