நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தாக்கல் செய்துள்ள வழக்குத் தொடர்பில் எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான சஜித் பிரேமதாஸவுக்கு நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியுள்ளது.
சஜித் பிரேமதாஸவுக்கு மேலதிகமாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கும் நீதிமன்றம் இந்த அறிவித்தலை பிறப்பித்துள்ளது.
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவும், ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பின் படி அக்கட்சியின் உறுப்புரிமையையோ பதவிகளையோ வகிப்பது சட்ட விரோதமானது எனக் கூறி பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்குத் தொடர்பிலேயே இந்த அறிவித்தல்கள் இன்று கொழும்பு பிரதான மாவட்ட நீதிவான் பூர்ணிமா பரணகமவினால் பிறப்பிக்கப்பட்டது.
ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், சஜித் பிரேமதாஸவும் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இன்னும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்காக டயானா கமகே, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரின் சத்தியக் கடதாசி மற்றும், ஐ.தே.க.வின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு எதிராக ரஞ்சித் மத்தும பண்டார எடுத்துள்ள நீதிமன்ற நடவடிக்கை உள்ளிட்டவற்றை மனுதாரர் தரப்பின் சான்றுகளாக நீதிமன்றில் முன் வைத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாப்பின் மூன்றாம் பிரிவின் 3 ( 3) ஆம் உறுப்புரை பிரகாரம், அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் வேறு கட்சியில் அங்கம் வகிக்கும் பட்சத்தில், கட்சி உறுப்புரிமையை அவர் இழப்பார் என கூறப்பட்டிருப்பதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால், சஜித் பிரேமதாஸ, ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோரின் கட்சியின் உறுப்புரிமையும், தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளும் சட்டப்பூர்வமானது அல்ல என உத்தரவிடுமாறு மனுதாரரான டயானா கமகே நீதிமன்றை கோரியுள்ளார். அத்துடன் இந்த விவகாரம் விசாரிக்கப்படும் வரை அவர்களை தற்காலிகமாக பதவியில் இருந்து இடை நிறுத்தம் செய்து உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.
இந்நிலையிலேயே இந்த மனு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் பரிசீலனை செய்யப்பட்டதன் பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோரை எதிர்வரும் ஜனவரி 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.