இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் பிரமோதய விக்கிரமசிங்கவினால் இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வாவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அக்கட்டுரையில் சகலதுறை வீரர் சாமிக கருணாரத்ன ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கு தெரிவு செய்யப்படாமைக்கான காரணத்தினை சுட்டிக்கட்டியுள்ளதோடு, சாமிகவை அணியில் இணைத்துக் கொள்வதில் தலைமை பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வுட் கடும் எதிர்ப்பினை வெளியிட்டதாக தெரிவுக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அணியினை தெரிவு செய்யும் கலந்துரையாடலுக்கு இடையே சாமிக கருணாரத்ன தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், உலக கிண்ண போட்டியின் போது அவரது நடத்தை குறித்து தலைமை பயிற்றுவிப்பாளர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது போல், தலைமைப் பயிற்றுவிப்பாளர் சாமிக கருணாரத்ன தொடர்பான பல சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவரை மீண்டும் அணிக்கு கொண்டு வர, முதலில் பயிற்சியாளரின் நம்பிக்கையை பெற வேண்டும் என குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சாமிக கருணாரத்ன மீதான நம்பிக்கையை முற்றாக இழந்துள்ளதாக இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் அண்மையில் நடந்து முடிந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது, இலங்கை அணியின் பல வீரர்கள் ஒழுக்கமற்ற முறையில் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டதுடன், கற்பழிப்பு குற்றச்சாட்டிற்கு உள்ளான ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க, உள்ளூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, சாமிக கருணாரத்ன தொடர்பான சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதுடன், அதில் அவர் சிட்னி நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட கைகலப்பினை சரி செய்து, சாமிகவை சமாதானப்படுத்தி அழைத்து வர இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக மற்றும் பானுக ராஜபக்ச ஆகியோர் தலையிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த சம்பவங்களின் பின்னர் இலங்கை அணி நாடு திரும்பியதும், அணி முகாமையாளரின் அறிக்கையை பரிசீலித்த இலங்கை கிரிக்கெட் சபை, சாமிக கருணாரத்னவுக்கு ஒரு வருட தடை விதித்து, அது இடைநிறுத்தப்பட்டதுடன், 5,000 அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.