கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.
இதேவேளை, ”நீதிக்காக மக்கள் ஒன்றிணைவு” எனும் தொனிப்பொருளில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வூட்டும் செயற்றிட்டத்தை முன்னெடுத்தது.
கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரரை விடுக்குமாறு இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, வாழ்வதற்கான உரிமையை வழங்குமாறும் அதிகரித்து வரும் வாழ்கைச்செலவை குறைக்குமாறும் மகஜர் மூலம் கோரப்பட்டது.
களுத்துறை நகர் மத்தியில் இடம்பெற்ற எதிர்ப்பில் பல்கலைக்கழக மாணவர்கள் பாடல்களை பாடியதோடு, வீதி நாடகத்தையும் நடத்தினர்.
நுகேகொடையில் கையெழுத்து சேகரிக்கப்பட்ட போது நுகேகொடை பொலிஸ் காவலரணின் பொறுப்பதிகாரி குறித்த இடத்திற்கு வந்து மாணவர்களை கலைந்து செல்லுமாறு அறிவித்தல் விடுத்தார்.
கையெழுத்து சேகரிப்பிற்கு இணையாக கம்பஹாவில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
வசந்த முதலிகே மற்றும் கல்வெல சிறிதம்ம தேரருக்கு பிணை வழங்குமாறு வலியுறுத்தி பத்தரமுல்ல – கொஸ்வத்தை, பொரளை, மஹரகமவில் கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டன
கண்டி, அம்பாறை மற்றும் ஹொரணையிலும் கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டன