அத்தியாவசியமான 14 மருந்துகளின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக சீனாவினால் வழங்கப்பட்ட 28 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையைப்பயன்படுத்தியிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
சுகாதாரத் துறையின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்தியக் கடன் உதவியின் கீழ் கிடைக்கப் பெற்ற 200 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளமை குறித்தும் அமைச்சர் மேலும் விளக்கமளித்தார்.
இந்த 200 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேலதிகமாக இந்தியாவிலிருந்து கிடைத்த 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியில் எஞ்சியுள்ள 35 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூட்டம் அண்மையில் நடைபெற்ற போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.
அந்நியச் செலாவணி நெருக்கடியின் காரணமாக ஏற்பட்டுள்ள கேள்விகளால் இலவச சுகாதாரத்துறை சவால்களை எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலையில் தனியார் வைத்தியசாலைகள் அதிக கட்டணத்தை அறவிடுவது குறித்தும் இங்கு கவலை வெளியிடப்பட்டது. அரசாங்க வைத்தியசாலைகளை சரியாகப் பராமரிக்கத் தவறியமை மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள் இன்மையால் நோயாளர்கள் தனியார் வைத்தியசாலைகளின் சேவையைப் பெற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
அடுத்த ஆண்டுக்குள் அரசாங்க வைத்தியசாலைகளின் சேவைகளை நாடுவோரின் எண்ணிக்கை 25% முதல் 30% வரை அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாது என்று அமைச்சர்கூறினார். நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பங்கள் தனியார் வைத்தியசாலையின் வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளமையே இதற்குக் காரணம் என்றார்.
அரசாங்க ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் சம்பளங்களை வழங்குவதற்கு நிதி அமைச்சு முக்கியத்துவம் அளித்து பணத்தை ஒதுக்கியிருப்பதாக அமைச்சர் வலியுறுத்தினார். இதற்கு அடுத்ததாக சுகாதாரத் துறைக்கே அரசாங்கம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இருந்தபோதும் இது போதுமானதாக இல்லையென்றும் குறிப்பிட்டார்.
மருத்துவ பணியாளர்களின் இடமாற்றங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் தாம் வசிக்கும் இடங்களிலிருந்து தூரத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதால் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றார்கள் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
5 – 6 வருடங்களுக்கு உட்பட்ட அனைவரையும் இடமாற்றம் செய்வது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டார். நிலையங்களுக்கிடையில் பரஸ்பர பரிமாற்றத்திற்கு இணங்க விரும்பும் ஒருவரைக் கண்டுபிடிப்பது கடினமாக இருப்பதால் இடமாற்றங்களை ஏற்பாடு செய்வதில் நடைமுறைக் சிக்கல்கள் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.