கண்டி புற்றுநோய் வைத்தியசாலையில் நிலுவைத் தொகையாக இருந்த ரூ.48 லட்சம் மின்சார கட்டணத்தினை செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக சிகிச்சை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதனால் நோயாளிகள் கடுமையான அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று (25) நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் வைத்தியசாலையிலுள்ள வைத்தியர் ஒருவரால் தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும், சுகாதார அமைச்சரை நேரில் தொலைபேசியில் அழைத்து இந்த விடயம் தொடர்பில் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலைமையால் ரேடியம் சிகிச்சை உள்ளிட்ட பல நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
எனினும், இது தொடர்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தனது உரையில் இது தொடர்பில் தெரிவிக்கையில்;
“.. மின்சார கட்டணங்கள் உயர்வு தொடர்பில் வாதங்கள் எழுந்தன. மத வழிபாட்டுத்தலங்கள் மட்டுமின்றி எல்லா இடங்களுக்கும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. கண்டி மாவட்டத்தில் புற்றுநோய் வைத்தியசாலையின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சபையில் கிரியெல்ல எம்பி கேள்வி ஒன்றினை எழுப்பியிருந்தார். எங்காவது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதா என சம்பந்தப்பட்ட தலைவர் செயலாளரிடம் வினவினேன், எங்கும் அவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தனர்.
நான் கிரியெல்ல எம்பி இடம் கூறுகிறேன் அவ்வாறு துண்டிக்கப்பட்ட இடங்கள் இருந்தால் எமக்கு அறிவியுங்கள். நாம் அமைச்சு என்ற வகையில் அரசு என்ற வகையில் விசேடமாக சுகாதார துறைக்கு மின்சாரத்துண்டிப்பு மேற்கொள்ள வேண்டாம் என நாம் தெரிவித்துள்ளோம் ஏனைய இடங்கள் குறித்து அவ்வாறு கவனத்தில் கொள்வதில்லை. ஏனைய இடங்களில் எங்கே மின்சாரம் வழங்க வேண்டும் எங்கே வழங்கக்கூடாது என்று நாம், நான் அமைச்சர் என்ற வகையில் கூறுவதில்லை. அது மின்சார சபையின் தீர்மானம்.
ஆனால் நாம் சுகாதாரத்துறை என்று வரும்போது உணர்வுபூர்வமாக நடந்து கொள்ளுமாறு நாம் கூறியுள்ளோம். சுகாதாரத் துறைக்கு பாதிப்புக்கள் ஏற்படாது நடந்து கொள்ளுமாறும் நிலுவைக் கட்டணங்களை சரி செய்யும் அதே வேலை மின்சாரத்துண்டிப்பு செய்யாது தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குமாறு கோரியுள்ளோம். மீண்டும் ஒரு முறை கூறுகிறேன் எங்காவது அவ்வாறு நடந்திருந்தால் கூறுங்கள்.. நாம் தேடிப்பார்த்தோம். கண்டியோ,கொழும்பிலோ, ரிஜ்வே வைத்தியசாலைக்கும், புற்றுநோய் வைத்தியசாலைக்கும் கதைத்தோம். கண்டி அத்தியட்சகருக்கும் கதைத்தோம். எங்கும் அவ்வாறு மின்துண்டிப்பு இடம்பெற்றில்லை.
எனினும் நேற்றைய தினம் விகாரை ஒன்றுக்கு மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. விகாரைகளுக்கு நாம் விசேட சலுகைகள் வழங்கியில்லை. நாட்டில் மதஸ்தளங்கள் 134 இற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் மின்சாரக் கட்டணங்களில் இருந்து விடுதலை செய்துள்ளோம். அதாவது குறித்த விகாரைக்கு மின்சாரக்கட்டண பட்டியல் வழங்கப்படும் எனினும் அதன் கட்டணத்தினை மின்சார சபை செலுத்தும். அவ்வாறு மத வழிபாட்டு இடங்கள் 134 இருந்தன.
எனினும் மின்சார கட்டணத் திருத்தத்தின் போது பொது பயன்பாட்டு ஆணைகுழு வெளிப்படையாக கூறியதொன்று தான் ஒவ்வொருவரினதும் மின்சார கட்டணத்தினை செலுத்த முன்வராதீர்கள். அந்தந்த கட்டணங்களை குறித்த நபர்கள் செலுத்த வேண்டும். பணம் வர வேறு வழிகள் இல்லையென்றால் இலவசமாக வழங்க வேண்டாம். உண்மைதான் அது நடைமுறைப்படுத்த வேண்டியதொன்றுதான். அதனால் இப்போதைக்கு அதனை நடைமுறைப்படுத்துகிறோம்.
அதனால் தான் மத வழிபாட்டு தளங்கள், புனித பூமிகள், புனிதஸ் தளங்களுக்கு நாம் கூறியுள்ளோம் உங்கள் மின்கட்டணங்களை நீங்களே செலுத்திக் கொள்ளுங்கள். இது தொடர்பில் மகா சங்கரத்தினரும் கூறியிருந்தார்கள் இதில் கட்டணம் செலுத்தல் மற்றும் இலவசம் என்று பிரிவினைகள் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று… எல்லாருக்கும் சமனாக ஒரே விதிமுறையினை கையாள்கிறோம்..”