வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த 12 ஆம் திகதி களுத்துறையில் ஆரம்பிக்கப்பட்ட நடை பயணத்திற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடையூறு விளைவித்தமை , இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பொலிஸ்மா அதிபர் என்ற ரீதியில், சட்டவாட்சியை பாதுகாக்கும் வகையிலும் அமைதியை பேணும் நோக்கிலும் பொலிஸாரின் ஒழுக்கத்தை பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்னவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
நடை பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதற்கான காரணம், யாருடைய உத்தரவின் பேரில் அது நடைமுறைப்படுத்தப்பட்டது, யாரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது பொலிஸாரால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற தகவல்களின் அடிப்படையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சத்தியக் கடதாசி மூலம் தகவல்களை சமர்ப்பிக்குமாறும் குறித்த கடிதத்தில் பொலிஸ் மா அதிபரிடம் கோரப்பட்டுள்ளது.