கடந்த வருடத்தினை காட்டிலும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ரயில் தடம்புரள்வு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கொம்பனித்தெரு மற்றும் கொள்ளுப்பிட்டி ரயில்வே நிலையங்களுக்கு இடையில் இன்று ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளது.
பொல்கஹாவலையில் இருந்து இரத்மலானைக்கு சென்ற ரயில் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் கொள்ளுப்பிட்டி மற்றும் கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் போக்குவரத்து ஒருவழி போக்குவரத்திற்காக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
இதன்படி, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், ரயில் தடம்புரள்வு சம்பவங்கள் 42 ஆக அதிகரித்துள்ளன.
கடந்த வருடத்தில் 34 சம்பவங்களும், 2020 ஆம் ஆண்டில் 29 சம்பவங்களும் பதிவாகியிருந்தன.
ரயில் தடம்புரண்டால் அதனால் ஏற்படும் சேதத்திற்கான இழப்புக்களை ரயில்வே இயக்குநர்களிடமிருந்து வசூலிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வேகக்கட்டுப்பாட்டிற்கு ஏற்ப ரயில்களை இயக்குவதற்கு இயக்குநர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி, சில ரயில் சேவைகள் தாமதமடையக்கூடும் என ரயில் இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரட்ன குறிப்பிட்டுள்ளார்.