இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 141 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக பெத்தும் நிஸ்ஸங்க 67 ஓட்டங்களையும், பானுக ராஜபக்ஷ 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் 20க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் மார்க் வூட் 26 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், ஆதில் ரஷித் 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அத்துடன், இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 5 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டன.
இதனையடுத்து, 142 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அணிசார்பில் அதிகபடியாக அலெக்ஸ் ஹெல்ஸ் 47 ஓட்டங்களையும், பென் ஸ்டொக்ஸ் 42ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 23 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், தனஞ்சய டி சில்வா 24 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 24 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
அத்துடன், இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 8 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்த வெற்றியுடன் இங்கிலாந்து அணி புள்ளிப்பட்டியில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.