சர்வதேச இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அபராதம் விதித்துள்ளது.
இந்தியாவும் இலங்கையும் முன்னின்று நடத்தும் சர்வதேச T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் இரண்டாவது குழுவில் இடம்பெற்றது.
ஒரு போட்டி மழையால் தடைப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.
இறுதியாக கடந்த சனிக்கிழமை இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 05 ஓட்டங்களால் வெற்றியீட்டினாலும் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அற்றுப்போனது.
இதனால் தொடரில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் அந்நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அபராதம் விதித்துள்ளது.
இம்முறை குழாத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு வீரருக்கும் 05 மில்லியன் பாகிஸ்தான் ரூபா அபராதமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை உலகக் கிண்ணத்தில் Salman Ali Agha பாகிஸ்தான் அணியை வழிநடத்தியிருந்தார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையால் நடத்தப்படும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரொன்றில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக நான்காவது தடவையாகவும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாமல் வௌியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
