இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கலைஞர்கள் போன்றவர்களை அரசாங்கம் வெறுப்பதாகவும் அவர்களைக் கண்ட இடத்தில் கைது செய்வதற்கு அரசாங்கம் சிந்தித்து வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரச மிலேச்சத்தனம் மற்றும் அரச வன்முறைகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மக்களுடன் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக போராடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கலைஞர் தமிதா அபேரத்னவுக்கு 9 ஆம் திகதியே பொலிஸில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஆனால் அவர் தியத உயன போராட்டத்தில் ஈடுபட்ட போது உடன் கைது செய்யப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல நடிகை தமிதா அபேரத்னவின் நலன் விசாரிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று காலை கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தார்
கடந்த சில நாட்களாக போராட்டத்தின் பிரபல செயற்பாட்டாளராக இருந்த தமிதா அபேரத்ன தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிரங்கமாக காட்டுவதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவைக் கேட்கும் அரசாங்கம்,அதற்கு மாறாக குடிமக்களை வேட்டையாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலைமையை வண்மையாக கண்டிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கம் செய்ய வேண்டியது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதேயன்றி மக்களை வேட்டையாடுவதல்ல எனவும் அவர் தெரிவித்தார்.