இலங்கை மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கு முன்னுரிமையளிக்கும், அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் எடுத்துள்ள முயற்சிகளுக்கு பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க அவர்கள் பதவியேற்றமைக்கு வாழ்த்துத் தெரிவித்து அனுப்பியுள்ள செய்தியில் பிரித்தானியப் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கொள்கைகளை பின்பற்றுவது, ஜனநாயக இணக்கப்பாட்டை எட்டுவது என்பன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மீதான பிரித்தானிய அரசாங்கத்தின் கரிசனையை மீளவலியுறுத்தியுள்ள பிரதமர் போரிஸ் ஜோன்சன், ‘நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார, சமூக சவால்களுக்கு மத்தியில், பிரித்தானியா, இலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும். சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் மிக விரைவில் உங்களால் முன்னேற்றத்தைக் காண முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. இவ்விடயத்தில் இலங்கைக்கு உதவ, எமது சர்வதேச பங்குதாரர்களுடன் பிரித்தானியா இணைந்து செயற்பட காத்திருக்கின்றது.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் நிலையான மற்றும் கணிசமான முன்னேற்றத்தை அடைவதற்கு, இரண்டு அரசாங்கங்களும் இணைந்து செயற்பட முடியுமென்றும் பிரித்தானிய பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
‘செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு, , அணுகுமுறை மாற்றத்துடனான இலங்கையின் மனித உரிமைச் சான்றுகளை நிரூபிக்க இலங்கை அரசாங்கத்துக்கு சிறந்த தருணமாக இருக்கும். இவ்விடயங்களில் அனைவரும் உணரக்கூடிய உண்மையான முன்னேற்றத்தை உருவாக்க, பிரித்தானியாவும், சர்வதேச சமூகமும், இலங்கையுடன் இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது.
அண்மையில் அறிவிக்கப்பட்ட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தக திட்டம் தொடர்பில் சுட்டிக்காட்டிய பிரித்தானிய பிரதமர், இத்திட்டத்தின் மூலம் இலங்கை ஏற்றுமதி செய்யும் மொத்த பொருட்களின் பெரும்பகுதிக்கு, வரிச் சலுகை அணுகுமுறை மூலம் பயனடைவதற்கான வாய்ப்பு கிட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
‘எமது இருதரப்பு உறவை பலப்படுத்துவதன் மூலம் வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றை மேலும் மேம்படுத்துவதற்கான பல வாய்ப்புக்களை நாம் கண்டறிய முடியும். பசுமை பொருளாதாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலு மூலம், இலங்கைக்கு ஆதரவு வழங்குவதற்கான உறுதியான சந்தர்ப்பங்கள் பிரித்தானியாவிடம் உள்ளதென நான் நம்புகிறேன்.” என்றும் பிரித்தானிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடந்த மே மாதம் காலநிலை மாற்றம் தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் தாம் அடைய எதிர்பார்த்திருக்கும் இலக்குகளை பரிமாறிக் கொண்டமை தொடர்பிலும் பிரித்தானிய பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ள நிலையில், பிரித்தானியா – இலங்கை இடையிலான உறவு மென்மேலும் பலமடையுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுக்கு இலங்கை வழங்கியுள்ள முன்னுரிமைக்கு பாராட்டுத் தெரிவித்துள்ள பிரித்தானிய பிரதமர், இலங்கையில் ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தியை மீளக்கட்டியெழுப்ப ஜனாதிபதி எடுத்துள்ள முயற்சிகள் வெற்றியளிக்க தான் உளமார வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு