இலங்கை டெஸ்ட் அணியின் சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஜெஃப்ரி வென்டர்சே ஆகியோர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, நாளை (08) ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா அவுஸ்திரேலியா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டி காலி மைதானத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது.
நேற்று நடத்தப்பட்ட உடனடி என்டிஜென் சோதனையின் போது, இருவருக்கும் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அவர்கள் இருவரையும் 5 நாட்களுக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ஏனைய வீரர்கள் மற்றும் துணை ஊழியர்கள் கொவிட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் பிரவீன் ஜெயவிக்ரம ஆகியோருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் தற்போது மெத்யூஸ் பூரண குணமடைந்துள்ளதாகவும், அவர் நாளைய போட்டியில் இணைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.