இடா புயல் காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நகரங்களில் வரலாறு காணாத மழை பெய்து, பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நியூஜெர்சி மாநிலத்தில் மட்டும் 23 பேர் உயிரிழந்திருப்பதாக அந்த மாநில ஆளுநர் ஃபில் மர்ஃபி தெரிவித்துள்ளார். இவர்களில் பெரும்பாலானவர்கள், வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள். திடீரென வெள்ளம் சூழ்ந்ததால் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்தத் தீவிரமான புயல் மற்றும் மழைப் பொழிவுக்கு பருவநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது. பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க ஏராளமான முதலீடுகள் செய்யப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது நியூயார்க் நகரில் மற்றும் நியூ ஜெர்சியிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் மழை, வெள்ளம் காரணமாக நியூயார்க் நகர சுரங்க ரயில் சேவைகள் அனைத்தும் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.