சீனா நன்கொடையாக வழங்கிய சுமார் 30 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுமாறு வடகொரியா கேட்டுக் கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் நிலவிவரும் தடுப்பூசிக்கான பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குமாறு வடகொரியா கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் பெற்றுக்கொள்வதை நோக்கமாகக் கொண்ட கோவேக்ஸ் (COVAX ) திட்டத்தின் கீழ் சீனா தயாரித்த சினோவாக் (Sinovac ) தடுப்பூசிகள் வடகொரியாவுக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
வடகொரியா தடுப்பூசிகளை நிராகரிப்பது இது முதல் முறையல்ல எனவும் பக்கவிளைவு ஏற்படும் அபாயம் இருப்பதைச் சுட்டிக் காட்டி கடந்த ஜூலை மாதத்தில் சுமார் 20 லட்சம் டோஸ் ஆஸ்ட்ரோஜெனீகா தடுப்பூசியை வடகொரியா நிராகரித்ததாக தெரிவிக்கப்படுகின்றன.
கடந்த ஆகஸ்ட் 19-ஆம் திகதி வரை வட கொரியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட எவரும் பதிவு செய்யப்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.