ஏற்றுமதி கைத்தொழில் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணியை நேரடியாக மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி குறித்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அந்நியச் செலாவணியை விரைவாக ஈட்டுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கைத்தொழில் துறையில் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி இதன்போது கருத்துத் தெரிவித்தார்.
நீண்டகாலமாக இருக்கின்ற விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் முதலீட்டிற்கு கடுமையான தடையாக உள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி; அந்நியச் செலாவணியை ஈட்டக்கூடிய கைத்தொழில்களை இனங்கண்டு அவற்றின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் அந்நியச் செலாவணி நெருக்கடியினால் கைத்தொழில் துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அனுர திஸாநாயக்க மற்றும் கைத்தொழில் அமைச்சின் துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகளும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.