குத்தகை பிரச்சினை காரணமாக ரஷ்யாவின் ‘எரோஃப்ளோட்’ விமானம் இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு இலங்கை தடை விதித்துள்ளது. இலங்கையின் இந்த செயற்பாட்டினால் ரஷ்யா அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன் குறித்த தடையினை நீக்குமாறு கோரி ரஷ்ய விமான நிறுவனத்தினால் கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்றத்தில் மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, ரஷ்ய ‘எரோஃப்ளோட்’ விமானத்தின் சகல பயணிகளும் இன்றும், நாளையும் ரஷ்யாவிற்கு அனுப்பப்படுவார்கள் என இலங்கையில் உள்ள ‘எரோஃப்ளோட்’ நிறுவனத்தின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மொஸ்கோவ் நோக்கிப் பயணிக்கவுள்ள விமானங்களில் குறித்த பயணிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக குறித்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் ரஷ்ய விமான நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்றத்தில் எதிர்வரும் 8ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.