மாதவிடாய் வலியால் பிரெஞ்ச் ஓபனை தவறவிட்ட சீன வீராங்கனை ஜெங் கின்வென் “ஆணாக பிறந்திருக்கலாம்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் தொடரின் நான்காவது சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்விடெக்கிற்கு எதிராக தரவரிசையில் 74-வது இடத்தில் இருக்கும் சீன வீராங்கனை ஜெங் கின்வென் மோதினார்.
19 வயதேயான ஜெங், இகா ஸ்விடெக்கிற்கு எதிராக கடுமையாக போராடி 7(5)-6 என்ற கணக்கில் முதல் செட்டை தன்வசமாக்கி அசத்தினார். ஆனால் 2வது செட் துவங்கும் முன் அவருக்கு மாதவிடாய் காரணமாக வயிற்றுப்பகுதியில் வலி ஏற்பட சில நிமிடங்கள் மருத்துவ ஓய்வு எடுத்துக் கொண்டார்.
பின்னர் ஆடுகளத்திற்கு வந்த அவர் மாதவிடாய் வலியுடன் அடுத்த செட்டை ஆடினார். ஆனால் வலி அதிகமாக இருக்கவே அவரால் முதல் செட்டைப் போல இயல்பாக விளையாட இயலவில்லை. 0-6 என்ற கணக்கில் 2ஆம் செட்டை இகாவிடம் பறிகொடுத்தார்.
வலி இன்னும் கடுமையானதால் 3வது செட்டையும் 2-6 என்ற இகாவிடம் இழந்து தொடரை விட்டு வெளியேறும்படி ஆனது. அதன்பின் பேசிய ஜெங் கின்வென், “என்னால் டென்னிஸ் விளையாட இயலவில்லை. வலி மிகவும் வேதனையாக இருந்தது. இது வெறும் பெண்களின் விஷயங்கள், உங்களுக்குத் தெரியும். முதல் நாளில் எனக்கு எப்போதும் மிகவும் வேதனையாக இருக்கும். மேலும் என் இயல்புக்கு எதிராக என்னால் செல்ல முடியவில்லை.” என்று கூறினார்.
“ஆடுகளத்தில் நான் ஒரு ஆணாக இருக்க விரும்புகிறேன், ஆனால் அந்த நேரத்தில் என்னால் முடியாது.நான் ஆணாக இருந்தால் இந்த பிரச்னை வந்திருக்காது. வலி இல்லாவிட்டால், இன்னும் சிறப்பாக ஓடவும், கடினமாக அடிக்கவும், ஆடுகளத்தில் அதிக முயற்சி எடுக்கவும், இன்னும் ரசிக்க முடியும் என்று நினைக்கிறேன். இன்று கொடுக்க நினைத்ததை கொடுக்க முடியாமல் போனது பரிதாபமே” என்று பேசினார் ஜெங் கின்வென்.