இலங்கையில் இருந்து மீண்டும் நாடு திரும்ப விரும்பும் தங்களது நாட்டு பிரஜைகளை உடனடியாக அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிலிப்பைன்ஸ் வெளிவிவகார திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அவர்களை ‘வீட்டுக்கு அழைத்து செல்லுங்கள் எங்களிடம் பணம் உள்ளது’ என பிலிப்பைன்ஸ் வெளிவிவகார செயலாளர் தியோடோரோ லோக்சின் ஜூனியர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவுகின்றமையால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் டாக்காவில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் மற்றும் கொழும்பில் உள்ள பிலிப்பைன்ஸ் துணை தூதரகம் ஊடாக இலங்கையின் நிலை தொடர்பில் தொடர்ந்து அவதானித்து வருவதாக அந்த நாட்டு வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் மீண்டும் நாடு செல்ல விரும்புபவர்கள் கொழும்பில் உள்ள துணைத்தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியும் என பிலிப்பைன்ஸ் வெளிவிவகார செயலாளர் தியோடோரோ லோக்சின் ஜூனியர் தெரிவித்துள்ளார்.