இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை தினமாக கல்வி அமைச்சு அறிவித்துள்ள போதிலும், கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை கடமைகளுக்குரிய பணிக்குழாமினர், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவாறு கடமைகளுக்கு சமுகமளிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், பரீட்சை மண்டபமாக பயன்படுத்தப்பட உள்ள சகல பாடசாலைகளின் அதிபர்களும், இன்றைய தினம் பாடசாலைகளுக்கு சமுகமளித்து மண்டபங்களை ஒழுங்கமைக்கும் பணிக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன அறியப்படுத்தியுள்ளார்.
பரீட்சை மேற்பார்வையாளர்களினதும், அதிபர்களினதும் சிபாரிசுக்கு அமைய பரீட்சை நிலைய கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக நோக்குநர்களாக பெயரிடப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் மேற்பார்வையாளர்களின் அழைப்புக்கு அமைய, உரிய பணிக்கு சமுகமளித்தல் வேண்டும்.
எரிபொருள் சிக்கனத்தை கருத்திற்கொண்டு, நோக்குநர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டத்தை இம்முறை இணையவழி காணொளி தொழில்நுட்பம் மூலம் நடத்துவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறியப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வேறு ஏதேனும் அத்தியாவசிய விடயங்கள் இருப்பின் திங்கட்கிழமை பரீட்சை தொடங்குவதற்கு முன்னர் அவற்றை அறிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியிலும், குறித்த காலத்தில் மாலை 6.30 இன் பின்னரும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, நடவடிக்கை எடுத்துள்ளது.
517, 496 பரீட்சார்த்திகளின் நலன்கருதி இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் 22ஆம் திகதி முதல் எதிர்வரும் முதலாம் திகதிவரையான காலப்பகுதிக்குள், பரீட்சை இடம்பெறும் காலத்திலும், மாலை 6 மணியின் பின்னரும் மின்தடையை அமுலாக்க வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபையை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு அவசியமான எரிபொருள் மற்றும் நீர் உள்ளிட்ட வளங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது.