அரசியல் ஸ்திரத்தன்மையை விரைவில் ஏற்படுத்தாவிட்டால் நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் நாடு தொடர்ந்தும் வீழ்ச்சிப் பாதையிலேயே பயணித்து வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அதன் பின்னரான வன்முறைச் சம்பவங்களையும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சம்பவத்தின் காரணமாக ஏற்பட்டிருந்த சிறிய அளவிலான முன்னேற்றமும் இல்லாது செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கூடிய விரைவில் ஏதேனுமொரு முறையில் நிலையான அரசாங்கமொன்றை மக்கள் பிரதிநிதிகள் உருவாக்க வேண்டும் எனவும் நாட்டில் நிலையான மற்றும் ஸ்திரத்தன்மையான ஆட்சியொன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டால் மின் விநியோகத் தடை பல மணி நேரங்களுக்கு நீடிக்கும் அபாயம் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய அமைதியின்மையை முற்றிலுமாக நிறுத்தி, நாட்டை வழமைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், இது தொடர்பில் பொதுமக்களும் உணர்ந்து செயற்பட வேண்டுமென நாட்டின் பொறுப்பு வாய்ந்த நிறுவனம் என்ற அடிப்படையில் மத்திய வங்கி வலியுறுத்துவதாக அதன் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.