மருந்து, உணவு, எரிபொருள் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 300 மில்லியன் யுவான் நிதியை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இரு நாடுகளின் பிரதமர்களுக்கும் இடையில் கடந்த மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின் பலனாக இந்த நிதியுதவியை சீனா வழங்கவுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்கள் குறித்து சீனா அறிந்திருப்பதாக குறித்த கலந்துரையாடலின் போது, அந்நாட்டு பிரதமர் Li Keqiang, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சீனா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் எனவும் சீன பிரதமர் கூறியுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிதியுதவியுடன் இலங்கைக்கு இதுவரை 500 மில்லியன் யுவான் நிதியுதவியை வழங்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.