அரசாங்கத்தில் இருந்து விலகிய 40 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்துகொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் தாம் உள்ளிட்ட 40 பேர் எதிர்க்கட்சித் தலைவரின் குழுவல்ல என்றும் எதிர்க்கட்சியில் சுயேட்சைக் குழுவாகச் செயற்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் பல காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
புதிய அமைச்சரவையை நியமிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என தான் நம்பவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் உட்பட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும், போராட்டம் நியாயமானது என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.