இந்திய அரசாங்கத்துடன் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட சமுத்திர பாதுகாப்பு ஒப்பந்தத்தினால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடுமென அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக தவறான பிரசாரம் வௌியிடப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளியிலிருந்து சேவையை பெற்றுக்கொள்ளும்போது வருடாந்தம் 600 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும், பழுதடையும் கப்பலை திருத்துவதற்காக இந்திய அரசாங்கத்தினால் எவ்வித கொடுப்பனவுகளும் இன்றி மிதக்கும் தடாகத்தை அமைப்பதற்கான செயற்றிட்டம் 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமுத்திர அகழ்வுப் பணி, மீட்பு பணி உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் தேவையான தரவுகளை பெற்றுக்கொள்வதற்காகவே ட்ரோன் கண்காணிப்பு விமானங்கள் பயன்படுத்தப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வசதிகள் இலங்கையிடம் இல்லாததன் காரணமாக, கடந்த சில வருடங்களாக இந்திய அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் தொடர்புகள் ஊடாக எவ்வித கட்டணமும் இன்றி, ட்ரோன் கண்காணிப்பு விமானமொன்றை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சமுத்திர மீட்புக்கான ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தை ஸ்தாபிக்க 6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இந்திய அரசாங்கம் வழங்குவதற்குரிய ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர், பாதுகாப்பு அமைச்சு, சட்ட மா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய ஏனைய அரச நிறுவனங்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு, உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் வௌியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.