இலங்கையை சுற்றுலாப் பயணிகளின் ஆசியப் பயண இலக்காக மாற்ற முடியும் எனவும் இதற்கான தடைகளை நீக்கி, உலகளாவிய ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் மூலம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையை இன்று (24) பார்வையிட்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஆண்டின் முதல் காலாண்டில் 260,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகையை விட அதிகமாகும் எனவும் இந்த ஆண்டு இறுதிக்குள் 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கை அடைய அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இதற்கு சுற்றுலாத்துறையின் சகல பிரிவுகளும் தயாராக வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், ஹோட்டல் முகாமைத்துவ பயிற்சி நிறுவனம் மற்றும் மாநாட்டு பணியகம் என்பனவற்றை பார்வையிட்ட ஜனாதிபதி, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஊழியர்களை பாராட்டினார்.
சுற்றுலாத்துறையில் இருந்து ஆண்டுக்கு 10 பில்லியன் டொலர்களை திரட்ட அரசு இலக்கு வைத்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் சுற்றுலாத்துறையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இது கொவிட் தொற்றுநோயால் மேலும் வீழ்ச்சியடைந்தது. உரிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது.
சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புகள் உள்ளன. அதற்கேற்ப பயிற்சிகளை விரிவுபடுத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார். நாடு முழுவதும் வியாபித்துள்ள ஹோட்டல் கட்டமைப்பின் உதவியுடன் இளைஞர்களுக்கு நடைமுறை ரீதியிலான பயிற்சி மற்றும் கோட்பாட்டு அறிவையும் வழங்கத் திட்டமிடுவதன் மூலம் பாரியளவிலான தொழில் வாய்ப்புகளை உருவாக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இந்நாட்டில் கால் வைத்தது முதல் மீண்டும் திரும்பிச் செல்லும் வரை உயர்தர விருந்தோம்பலுடன் கவர்ச்சிகரமான சேவையை வழங்குவது சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
விமான நிறுவனங்களுடன் கலந்துரையாடி இலங்கைக்கான விமானப் பயண எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.