ஐ.பி.எல். ரி-20 தொடரில் சம்பியன் அணியான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். ஆரம்பமானதில் இருந்து அணித்தலைவராக இருந்த மகேந்திர சிங் டோனி, தற்போது அந்த பதவியை ஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளதாக அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
2012ஆம் ஆண்டு முதல் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் ரவீந்திர ஜடேஜா, இதுவரை காலமும் அணியை வழிநடத்தும் மூன்றாவது வீரராக மட்டுமே இருந்துவந்த நிலையில், தற்போது அவருக்கு அணித்தலைவர் என்ற மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
40 வயதான மகேந்திர சிங் டோனி, நடப்பு ஆண்டு தொடருடன் ஓய்வு பெறுவார் என நம்பப்படுகின்ற நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகின்றது.
டோனி தலைமையில் இதுவரை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 2010ஆம், 2011ஆம், 2018ஆம் மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
நாளை மறுதினம் (சனிக்கிழமை) மும்பை – வான்கடே மைதானத்தில் ஆரம்பமாகும் ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஆரம்ப போட்டியில், நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.