தேசிய பொருளாதார சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு விரைவாக செயற்படுத்த வேண்டிய ஐந்து பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் முதற் தடவையாக இன்று (21) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தேசிய பொருளாதார சபையின் உறுப்பினர்களையும் சந்தித்து பரிந்துரைகளை முன்வைத்தனர்.
ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நியமிக்கப்பட்ட தேசிய பொருளாதார சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக 16 பேரைக் கொண்ட ஆலோசனைக் குழுவொன்று மார்ச் மாதம் 15ஆம் திகதி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது.
1. சர்வதேச நிதி உதவிகளை முன்மொழிவதற்காக மத்திய வங்கி மற்றும் திறைசேரியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளைக் கொண்ட தொழிநுட்பக் குழுவொன்றை உடனடியாக நியமித்தல்.
2. நிதி ஆலோசகர் ஒருவரை உடனடியாக நியமித்தல் மற்றும் சட்ட ஆலோசகர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுத்தல்.
3. சர்வதேச நிதி உதவிகளை முன்மொழிவதற்காக மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை தொழிநுட்பக் குழு விரைவாக முன்வைக்க வேண்டும்.
4. நிதி அமைச்சருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக, நிபுணர் குழு ஒன்றை அடையாளம் காணல்.
5. விநியோக தடைகளைத் தவிர்ப்பதன் மூலம் நம்பிக்கையை வளர்ப்பதில் கவனம் செலுத்துதல்.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, சரியான திசையில் வழிநடத்துவதற்கு மறுநிதியளிப்பை வலுப்படுத்த குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஆலோசனைக் குழு மேலும் பரிந்துரை செய்தது. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் விளைவுகளை இந்நாடும் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. பரிமாற்ற நெருக்கடி இதில் மிக முக்கியமானது. எதிர்கொள்ளும் சவால்களை சரியாக நிர்வகிப்பதன் மூலம், ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை குறுகிய காலத்தில் தவிர்க்க முடியும் என ஆலோசனைக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.