நாளை நாட்டை வந்தடையவுள்ள எரிவாயு கப்பலுக்கு கட்டணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல் மாலைத்தீவில் இருந்து நாட்டை வந்தடையவுள்ளது.அதில் 3,500 மெற்றிக் டொன் எரிவாயு அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 17ஆம் திகதி நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 3,500 மெற்றிக் டொன் எரிவாயு அடங்கிய கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் அதனை தரையிறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதில் இதுவரையில் 1,000 மெற்றிக் டொன் எரிவாயு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தினால் நேற்று முன்தினம் 120,000 எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டன.
அத்துடன் நேற்றும் இன்றும் விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
குறித்த கப்பலில் உள்ள எரிவாயு எதிர்வரும் 2 நாட்களுக்கு போதுமானதானதெனவும் நாளை நாட்டை வந்தடையவுள்ள கப்பலில் உள்ள எரிவாயுவை உடனடியாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் நேற்றைய தினமும் எரிவாயுவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.
அதனை தொடர்ந்து , லாஃப் நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர் விலை 4,199 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எவ்வாறாயினும், லாஃப் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிடிய, எந்த விலை அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, விலை கட்டுப்பாடு இல்லாமைக் காரணமாக எரிவாயு நிறுவனங்கள் விலை அதிகரிப்பை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன குறிப்பிட்டார்.
மேலும், டொலர் பொறுமதி அதிகரிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பை அடிப்படையாக கொண்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கபபடலாம்.
விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு அறிவிக்க வேண்டியது அவசியம் இல்லை.
அசாதாரண விலை அதிகரிப்பாயின் மாத்திரமே அமைச்சு தலையிடும் எனவும் மேலும் குறிப்பிட்டார்.