ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுக்கு தீர்வினை வழங்குமாறு கோரி கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியினர் இதனை ஏற்பாடு செய்துள்ளனர்
எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் கொழும்பை நோக்கி வந்த வண்ணமுள்ளனர்.
‘நாடு நாசம் – நாட்டைக் காப்போம்’ என்ற தொனிப்பொருளில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த எதிர்ப்பு பேரணியில் ஐக்கிய ஊழியர் சங்கம், ஐக்கிய மகளிர் அமைப்பு, சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொள்கின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார உள்ளிட்ட குழுவொன்று இன்று(15) காலை கொழும்பை நோக்கிய தமது பயணத்தை ஆரம்பித்திருந்தது.
இதனிடையே, ஹட்டன், பொலன்னறுவை, காலி ஆகிய பிரதேசங்களிலிருந்தும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கொழும்பை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.