கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள கப்பலில் இருந்து 3,500 மெற்றிக் டொன் எரிவாயுவை தரையிறக்கும் நடவடிக்கையை இன்று ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சிடமிருந்து 15 மில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டதை அடுத்து, கொழும்பு துறைமுகத்தில் கடந்த பல நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ள 3 கப்பல்களுள், 2,600 மெற்றிக் டொன் எரிவாயு தாங்கிய கப்பலிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் நேற்று இடம்பெற்றன.
நாடுமுழுவதும் உள்ள எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது தொடர்ச்சியாக இடம்பெறுகின்றமையினால், தற்போது நாட்டில் நிலவும் எரிவாயு பற்றாக்குறை கிரமமாக நீங்கி வருவதாக அறியமுடிகின்றது.
எவ்வாறிருப்பினும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள எரிவாயு விற்பனை நிலையங்களில் நேற்றைய தினமும் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக நுகர்வோர் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
எரிவாயு இன்மை காரணமாக நாட்டின் பல பாகங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் சிற்றுணவகங்களில், உணவு தயாரிக்கும் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் ,எரிவாயு தட்டுப்பாட்டுக்கு மத்தியில் பொதுமக்கள் உணவு தயாரித்தல் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக மண்ணெண்ணெய்யைப் பயன்படுத்தும் நிலையில், சந்தையில் மண்ணெண்ணய்க்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.