எமது நாட்டின் தீர்மானிக்கும் ஆற்றலுள்ளவர்களாக பெண்கள் காணப்படுகின்றனர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் இன்று (08) காலை நடைபெற்ற 2022 சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
‘தியனிய’ வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவிகளுக்கு இலவச சுகாதாரப் பொருட்கள் விநியோகிக்கும் செயற்பாட்டின் இரண்டாம் கட்டம் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷவின் தலைமையில் குறியீட்டு ரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
உலக அளவில் நம் நாட்டிலும் பெண்கள் அனைத்து துறைகளிலும் வேகமாக முன்னேறி வருவதை நாம் அறிவோம். நம் நாட்டிலும் பெண்கள் தீர்மானிக்கும் ஆற்றல் மிக்கவர்களாக மாறிவிட்டனர்.
கொரோனா நெருக்கடியால் பெண்கள் வெளிநாடு செல்வதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போதைய டொலர் நெருக்கடி பிரச்சினைக்கு அதுவும் ஒரு காரணம்.
ஆடை கைத்தொழில் மற்றும் தேயிலை இலைகளின் ஊடாக டொலர்களை இந்த நாட்டிற்கு கொண்டு வந்தவர்கள் பெண்கள். பெருந்தோட்டத்துறையில் நாம் சம்பளத்தை அதிகரிக்கின்ற போது அதிகளவு பயன்பெறுவது பெண்களே.
ஆடைத் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டால், பெண்கள் அதிக அளவில் பயனடைவார்கள். அது மாத்திரமன்றி இன்று பல்கலைக்கழகங்களில் பெண்களே அதிகளவில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிகழ்வை தொடர்ந்து 08 பெண்கள் பாடசாலைகளையும் 02 கலவன் பாடசாலைகளையும் தேசிய பாடசாலைகளாக பிரகடனப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளேன். எமது கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மகளிர் தினத்தை முன்னிட்டே இதனையும் செய்கின்றனர் என்பதை குறிப்பிட வேண்டும்.இந்த நாட்டில் பெண்களுக்கு சிறந்த கல்வியை வழங்கவே இவை அனைத்தும் செய்யப்படுகின்றன.
இன்று நாம் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். நம் நாட்டில் மின்சாரம், டீசல், எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் போது பெண்கள் பாதிக்கப்படுவது நமக்குத் தெரியும்.அண்மையில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்னால் சென்ற பெண் ஒருவர் இது பற்றி உங்களுக்கு தெரியுமா எனக் கேட்டுள்ளார். எவரும் கூற வேண்டியதில்லை அவை ஜனாதிபதிக்கு தெரியும்.
இரண்டாவது கொரோனா அலையின் போது அக்குழுவினர் நாட்டை மூடுமாறு ஜனாதிபதியை கட்டாயப்படுத்தியது எனக்கு நினைவிருக்கிறது. அவ்வாறு மாதக்கணக்கில் மூடப்படும் போது நாடு பொருளாதாரப் படுகுழியில் விழும் என்பதை நாட்டை மூட நினைத்தவர்கள் அறிந்திருந்தார்கள்.
நாட்டை மூடி ஆடைத் தொழிற்சாலையை திறந்த போது அதனையும் மூடுமாறு அழுத்தம் கொடுத்தனர். நாடு மூடப்படும் போது மக்கள் அதிக துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்று மக்களுக்கு கூறிவிட்டே ஜனாதிபதி நாட்டை மூடினார். ஆனால் இன்று அது உண்மையாகிவிட்டது. இன்றைக்கு நாடு மூடப்பட வேண்டும் என்று குரல் கொடுத்த எவரும் துன்பப்படும் உங்களுக்காக துணை நிற்க மாட்டார்கள்.