மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் சுமுகமான இருதரப்பு உறவுகளை நோக்காகக் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் மற்றும் மியன்மார் வைர விழா யூனியன் தினத்தை முன்னிட்டு, சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் ஏழு இலங்கை மீனவர்களுக்கு மியன்மார் யூனியன் குடியரசு அரசாங்கம் மன்னிப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
மியன்மார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததால், ஏழு இலங்கை மீனவர்களுடன் கூடிய ‘துஷன் புதா’ IMUL-A-0741NBO என்ற இலங்கை மீன்பிடிக் கப்பல் மியன்மார் அதிகாரிகளால் கடந்த வருடம் டிசம்பர் 03ஆந் திகதி கைது செய்யப்பட்டது.
கெப்டனுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அதேவேளை, கப்பல் குழுவினருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இலங்கை மீனவர்கள் யாங்கூனில் உள்ள இன்செயின் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்குத் தேவையான கொன்சியூலர் உதவிகளை மியன்மாரில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் உதவியுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஒருங்கிணைத்து உதவியது.
மியன்மார் அரசாங்கத்துடன் ஒருங்கிணைப்புடன், இலங்கை மீனவர்கள் ஏழு பேரும் எதிர்வரும் மார்ச் 06ஆந் திகதி பி.சி.ஆர். பரிசோதனைகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.