பொதுச் சேவை மிகப்பெரியது. ஓர் அரச ஊழியர், மக்களின் ஒவ்வொரு தேவையிலும் தலையிடுகிறார். எனவே, அனைத்து அரச நிறுவனங்களினதும் பொதுச் சேவைகள் உரிய முறையில் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது விருப்பமாகும் என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக, இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற அரச அதிகாரிகளுடனான விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அரசாங்க நிறுவனங்களுக்கு தனிப்பட்ட முறையில் விஜயம் செய்து மேற்பார்வை செய்வதாகத் தெரிவித்த ஜனாதிபதி, ஆளுநர்கள் உட்பட அரச அதிகாரிகள் தமது நிறுவனங்களுக்குச் சென்று அவர்களின் பணிகளை மேற்பார்வையிட்டு அனைத்து ஊழியர்களையும் ஊக்குவிப்பார்கள் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
மக்களை வாழ வைக்க நாங்கள் இங்கு வந்துள்ளோம். அதற்கான சூழலைத் தயார்ப்படுத்த வேண்டும். அதிகாரிகளின் கடமை, பொறுப்பு, மனிதாபிமானம் என்பனவும் மிகவும் முக்கியமானவை ஆகும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
பசுமை விவசாயம் என்பது அரசாங்கத்தின் முக்கிய திட்டமாகும். கிராமப்புற மக்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் மற்றும் 90 சதவீதம் விவசாயம் அல்லது அதைச் சார்ந்த வாழ்வாதாரங்களில் ஈடுபட்டுள்ளனர். எதிர்காலச் சந்ததியினரின் முன்னேற்றத்துக்காக இயற்கை விவசாயம் அவர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
அவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும் மற்றும் நம்பிக்கையை வளர்க்க வேண்டும். தரமான சேதனப் பசளைகளை உரிய நேரத்தில் விநியோகிப்பதன் மூலம் வெற்றிகரமான பெறுபேறுகளை அடைய முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலு ஆதாரங்களை அதிகரிப்பதன் மூலம் தேசிய மின்சாரத் தேவைக்குப் பங்களிக்க முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கத்தின் குறுகிய மற்றும் நீண்டகால இலக்குகளை அடைவதற்கு உதவுமாறு அழைப்பு விடுத்தார்.