உக்ரேனில் கிழக்குப் பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தத் தூண்டுதல்களுக்கு எதிராக எந்த விதமான பதில் நடவடிக்கைகளிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம் என உக்ரேனிய அதிபர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ரஷ்யப் படையெடுப்புக்கு எதிராக எங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறினார்.
உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மியூனிக்கில் நடந்த ஒருபாதுகாப்பு மாநாட்டில் பேசுகையில், உக்ரேனிய மக்கள் “பயப்படவில்லை, ஆனால் நாங்கள் வாழவேண்டும் என்று நினைக்கிறோம்” என்றார்.
மேற்கத்திய தலைவர்கள் ”ரஷ்யாவை மகிழ்விக்க விரும்பும் வகையிலான கொள்கையைக் கடைபிடிப்பதற்கு” எதிராகத் தன் கருத்தை பதிவு செய்தார் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி யுக்ரேனுக்கு புதிய பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும் என ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார்.
யுக்ரேனிய அதிபரின் பாதுகாப்பு கருதி மியூனிக்கில் நடைபெற்ற மாநாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்தை மீறி, இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.
ரஷ்யா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும், தங்களைத் தாங்களே குடியரசுகளாகப் பிரகடனம் செய்து கொண்ட உக்ரேனின் கிழக்குப் பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில், நேற்று 1,400 வெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.