ஆபிரிக்காவில் ஐந்து வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக மாலாவி தலைநகரம் லிலோங்வியில் 3 வயது பெண் குழந்தைக்கு, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் டைப் 1 போலியோ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக, உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இவ்வகை போலியோ நோய் பரவல் மாலாவியில் தொடங்கியிருப்பதாக, மாலாவி சுகாதார அதிகாரிகள் அறித்துள்ளனர்.
குறித்த பாதிக்கப்பட்ட 3 வயது பெண் குழந்தைக்கு முடக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வகச் சோதனையில், இத்தகைய டைப் 1 போலியோ திரிபு, பாகிஸ்தானில் பரவும் திரிபுக்கு இணையானது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்தகைய போலியோ பாதிப்பு இன்னும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் மட்டுமே உள்ளன.
கடந்த 2016-ம் ஆண்டில் இத்தகைய போலியோ பாதிப்பு ஆபிரிக்காவின் போர்னோ மாகாணத்தில் கண்டறியப்பட்டது. பின்னர், 2020ல் இத்தகைய போலியோ பாதிப்பு இல்லாத கண்டமாக ஆபிரிக்கா அறிவிக்கப்பட்டது.
போலியோ, அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் தொற்று நோயாகும். இந்த வைரஸ், நரம்பு மண்டலத்தில் நுழைந்து சில மணிநேரங்களிலேயே முழுமையாக முடக்குவாதத்தை ஏற்படுத்தக்கூடியதாகும் என தெரிவிக்கப்படுகின்றன.