தாம் கைது செய்யப்படுதல் மற்றும் தடுப்புக்காவலில் வைக்கப்படுதலை இடைநிறுத்தி உத்தரவிடுமாறு கோரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உயர் நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்தார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை வழிநடத்திய மொஹமட் ஹாசிம் மொஹமட் சஹரான் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள B அறிக்கைக்கு அமைய, தம்மை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் 9/1 சரத்திற்கு அமைய கைது செய்யப்படுவதற்கும் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியால் தமக்கு தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவினால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அநாமதேய மனு ஒன்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட போலியான விசாரணை அறிக்கைக்கு அமைய தனக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள B அறிக்கையையும் வலுவிழக்கச் செய்யுமாறும் அடிப்படை உரிமை மனுவினூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏதேனுமொரு விதத்தில் தாம் கைது செய்யப்பட்டால், உடனடியாக விடுதலை செய்வதற்குரிய உத்தரவை பிறப்பிக்குமாறும், அவ்வாறு இடம்பெற்றால் 100 மில்லியன் நட்டஈட்டை செலுத்துவதற்கு உத்தரவிடுமாறும் ஷானி அபேசேகர தனது மனுவினூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவா, திணைக்களத்தின் பெண் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிரோஷனி பத்திரன உள்ளிட்ட 14 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தம்மை கைது செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதனூடாக தமது அடிப்படை உரிமை மீறப்படும் எனவும் ஷானி அபேசேகர தனது மனுவின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளார்.