உயர்க்கல்விச் சட்டத்தைத் திருத்தத்துக்கு உட்படுத்தி, அதனை உடனடியாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அதுவரையில், தாதியர் கல்லூரிகளை ஒன்றிணைத்து தேசிய பல்கலைக்கழகமாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்கவுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
பொதுச் சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் கோரிக்கைக்கமைய, இன்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
தாதியர் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல், தரம் இரண்டில் இருந்து தரம் ஒன்றுக்கு முன்கூட்டியே பதவி உயர்வுகளை வழங்குதல், 36 மணித்தியாலங்களாகக் காணப்படும் சேவைக் காலத்தை வாரத்துக்கு 05 நாட்களுக்கான 30 மணித்தியால சேவைக் காலமாகக் கருதுதல், மருத்துவ நிபுணர்களுக்கு ரூ.35,000 DAT கொடுப்பனவு விகிதாசாரப்படியான ரூ.10,000 கொடுப்பனவு, சீருடைக்கான கொடுப்பனவுகளுக்குரிய சுற்றுநிரூபத்தை வெளியிடுதல் மற்றும் அடிப்படைச் சம்பளத்தில் 1/100 வீதம் மேலதிகச் சேவைக் கொடுப்பனவு போன்ற கோரிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
ஏப்ரல் மாதத்துக்குள் உயர்க்கல்விச் சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் முன்வைக்கவும் மே மாத இறுதிக்குள் தாதியர் பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக, சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
IIஆம் தரம் முதல் Iஆம் தரம் வரையிலான பதவி உயர்வுகளை முன்கூட்டியே வழங்குவதற்கும் சீருடைக் கொடுப்பனவை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, சுகாதாரம் மற்றும் நிதி அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
“கடும் சிரமங்களுக்கு மத்தியிலேயே, ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களுக்குமான 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு தரப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்றும் போது மற்றொரு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.
எனினும், நிலவும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் அனைவரது கோரிக்கைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்துவது கடினமென்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அதனால், ஒட்டுமொத்த அரச சேவைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், நிதி அமைச்சு மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, தாதியர் கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்துங்கள்” என்று, உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.