எவ்வித நோய் அறிகுறிகளும் தென்படாத ஒமிக்ரோன் தொற்றாளர்களிடமிருந்து வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இயல்பாகவே ஒமிக்ரோன் பிறழ்விற்கான பல அறிகுறிகள் தென்படாது என விசேட வைத்திய நிபுணர் சுட்டிகாட்டியுள்ளார்.
இந்நிலையில், நோய் அறிகுறிகள் தென்படாத காரணத்தினால் அன்டிஜன் அல்லது PCR பரிசோதனைகளை மேற்கொள்ளாத குறிப்பிட்ட சதவீத கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் இருப்பதால் மேலும் தொற்று பரவலாம் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, ஒமிக்ரோன் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஒமிக்ரோன் தொற்று குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோய் என்பது தவறான கருத்தாகும் என சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் ரஞ்சித் படுவந்துடாவ தெரிவித்துள்ளார்.
அத்துடன்,ஒமிக்ரோன் தொற்று காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் பலர் சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய நிபுணர் ரஞ்சித் படுவந்துடாவ குறிப்பிட்டார்.
இந்நிலையில், தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வது மிக அவசியம் என்றும் விஷேட வைத்திய நிபுணர் ரஞ்சித் படுவந்துடாவ மேலும் தெரிவித்துள்ளார்.