பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – ஹொரணை வீதியிலுள்ள போக்குந்தர பாலத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் இன்றிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தில் அபிவிருத்தி பணிகளின் காரணமாக மீள் அறிவித்தல் வரை காலை 6 மணிமுதல் மாலை 3 மணிவரை கொழும்பை நோக்கி 2 பாதைகளும் ஹொரணையை நோக்கி ஒரு பாதையும் , மாலை 3 மணிமுதல் காலை 6 மணிவரை கொழும்பை நோக்கி ஒரு பாதையும் ஹொரணையை நோக்கி 2 பாதையும் என்ற அடிப்படையில் வாகன போக்குவரத்து வரையறை செய்யப்பட்டுள்ளது.
மேலும், காலை 6 மணி முதல் காலை 9 மணிவரை மற்றும் மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரை பஸ் போக்குவரத்து தவிர ஏனைய சகல கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறும் காலப்பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்த்துக் கொள்வதற்காக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸாா் பொது மக்கள் மற்றும் சாரதிகளிடம் கோரியுள்ளனா்.
அதற்காக கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மாற்று வீதிகளாக பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,
1. ஹொரணையிலிருந்து கொழும்பை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் பிலியந்தல, கட்டுபெத்த பிரதேசத்தினூடாக காலி வீதிக்கு பிரவேசித்து கொழும்பை நேக்கி பயணிக்க முடியும்.
2. ஹொரணையிலிருந்து வேரஹெர வரை பயணிக்கும் வாகனங்கள் காலி வீதியினூடாக இரத்மலானை, பொருபன வீதியினூடாக வேரஹெர வரை பயணிக்க முடியும்.
3. கொழும்பிலிருந்து ஹொரணை வரை பயணிக்கும் வாகனங்கள் பொரலஸ்கமுவயிலிருந்து மஹரகமவுக்கு வந்து மஹரகமவிலிருந்து பிலியந்தலவினூடாக பயணிக்க முடியும்.