இறக்காமத்தில் விஷ்வரூபம் எடுக்கும் கால்நடை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சினை!
இறக்காமம் வில்லு குளத்திற்கு சொந்தமான குளத்தை அண்டிய பகுதிகளை அப்பகுதியில் வாழும் மாட்டுப் பண்ணையாளர்கள் பல வருடங்களாக மேய்ச்சல் தரைக்கு பயன்படுத்தி வந்த நிலையில் அண்மைக்காலமாக சிலரின் அதிகார வலுவுடன் அப்பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இறக்காமம் வில்லுக் குளமானது இலங்கையில் காணப்படும் இரு நன்னீர் குளங்களில் ஒன்றாகும். அன்னளவாக 2900 ஏக்கர் கொண்ட இக்குளம் பல வழிகளில் மக்களுக்கு நன்மைபயக்கின்றது. குறிப்பாக 500 கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இக்குளம் ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர் வழங்கும் பாய்ச்சல் குளமாக காணப்படுகிறது. மேலும் 900 ஏக்கருக்கும் அதிகமான இக்குளத்தின் உயர் மட்ட எல்லைப் பகுதிகள் மாட்டுப் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையாகவும் மாடுகள் நீர் அருந்தி ஓய்வெடுக்கும் பகுதியாகவும் இருந்து வருகிறது.
இருப்பினும் அண்மைக்காலமாக குளத்திற்கு சொந்தமான இம்மேட்டு நிலப் பகுதிகள் அயலில் உள்ள விவசாயக் காணிச் சொந்தக்காரர்களால் அடாத்தாக ஆக்கிரமிக்கப்பட்டு குளத்தை நம்பி வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான மாடுகளின் மேய்ச்சல் தரை அழிக்கப்பட்டுள்ளது.
மேலும் குளத்தின் உயர்மட்ட மேட்டு நிலத்தை நம்பி வாழ்ந்த நூற்றுக்கணக்கான பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் இல்லாமல் செய்யப்பட்டு மாடுகளின் மேய்ச்சல் நிலமும் இல்லாமல் ஆக்கப்பட்டு பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக மாட்டுப் பண்ணையாளர்கள் அயல் பிரதேசங்களான தமன, எக்கல் ஓயா, பிபிலை போன்ற பிரதேசங்களுக்கு தங்களது மாட்டுப் பண்ணைகளை நகர்த்தியுள்ளதோடு பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை நில வாடகையாக கொடுத்து பண்ணைகளை நடாத்தி வருகின்றனர்.
மேலும் சிலர் தாங்கள் தொன்று தொட்டு குளத்தை அண்டி நடாத்தி வந்த குளத்தின் மேட்டு நில பண்ணைப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டதன் காரணமாக மாடுகளை விற்று வருகின்றனர்.
அதிகமான மாடுகள் மேய்ச்சல் இன்றி பட்டினியால் இறக்கின்றன. மாடுகள் பல்வேறு கொல்லை நோய்களுக்கு உள்ளாகி பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பண்ணையாளர் சமூகம் அழிந்துவரும் நிலை உருவாகியுள்ளது.
எனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குளத்தின் உயர்மட்ட எல்லைப் பகுதிகளை விடுவித்து தருவதோடு அதனை அடையாளப்படுத்தி உறுதிப்படுத்துவதன் ஊடாக பல்லாயிரக்கணக்கான மாடுகளின் வாழ்வாதரத்தை உறுதிப்படுத்தி தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.