தேர்தலில் தோல்வியடைந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஆளுநர்கள், முன்னாள் முதலமைச்சர்கள், பௌத்த நாயக தேரர்கள், நிலமேகள் மற்றும் உயிரிழந்த முன்னாள் அரசியல்வாதிகளின் மனைவிகள் ஆகியோரின் பாதுகாப்புக்காக அமைச்சரவை பாதுகாப்பு பிரிவை ((M.S.D) சேர்ந்த 245 அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் கூறுகின்றன.
இவர்களுக்கு வழங்கப்படும் இந்த பாதுகாப்புக்காக அரசு வருடாந்தம் சுமார் 15 கோடி ரூபாயை செலவிடுவதாக தெரியவருகிறது.
அமைச்சரவை பாதுகாப்பு பிரிவை சேர்ந்த பெருந்தொகையான பாதுகாப்பு அதிகாரிகள் இவ்வாறு தோல்வியடைந்த அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் மனைவிகளின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு பிரிவுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால், அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் பணிகளுக்கு பெரும் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக வெளிநாட்டு தூக்குழுவினர் வருகை தரும் போது அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு அமைச்சரவை பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 17 அதிகாரிகள் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளனர்.
காலஞ்சென்ற முன்னாள் சபாநாயகரின் மனைவி, உயிரிழந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் மனைவி ஆகியோருக்கு தலா இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட உதித் லொக்குபண்டாரவுக்கும் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பௌத்த நாயக்க தேரர்களின் பாதுகாப்புக்காக 38 பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் பெரியளவில் நிதி ரீதியான கஷ்டங்களை எதிர்நோக்கி வரும் சூழ்நிலையில், பாதுகாப்பு சம்பந்தமாக பெரிய அச்சுறுத்தல்களை எதிர்நோக்காத நபர்களுக்கு அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பை வழங்குவது பாரியளவில் நிதியை வீண் விரயமாக்கும் அநீதியான செயல் என பொருளாதார நிபுணர்கள் அரசாங்கத்திற்கும், நிதியமைச்சருக்கு ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளதாக பேசப்படுகிறது.