HomeTop newsஆப்கானிஸ்தானில் பெண்களின் சொந்தப் பெயர்களைப் பயன்படுத்தத் தடை?

ஆப்கானிஸ்தானில் பெண்களின் சொந்தப் பெயர்களைப் பயன்படுத்தத் தடை?

ஆப்கானிஸ்தானில் பெண்களின் உண்மையான பெயர்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ‘பீபி’ என்ற பொதுவான சொல்லையும், சில இடங்களில் ‘ஆடு’, ‘பசு’ போன்ற சொற்களையும் பயன்படுத்துமாறு தலிபான் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பால்க் (Balkh) மாகாணத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பெண்களின் இயற்பெயர்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘ஸான் டைம்ஸ்’ (Zan Times), ‘தி கார்டியன்’ (The Guardian), ‘எல் பாயிஸ்’ (El País) ஆகிய சர்வதேச ஊடகங்களின் புலனாய்வு அறிக்கைகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, பால்க் மாகாணத்தில் செயற்படும் தலிபான்களின் ஒழுக்கநெறி அமைச்சக அதிகாரிகள், மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் அரச அலுவலகங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் மருத்துவ மருந்துச் சீட்டுகளில் பெண்களின் உண்மையான பெயர்களை எழுதவோ அல்லது பொதுவெளியில் உச்சரிக்கவோ கூடாது என அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்குப் பதிலாக, பெண்களை ‘பீபி’ (Bibi) என்ற பொதுவான பெயரால் குறிப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் ‘ஆடு’, ‘பசு’ போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுவதாகவும் குறித்த அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தாரி (Dari) மற்றும் பாஷ்டோ (Pashto) மொழிகளில் ‘பீபி’ என்பது பெண்களைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் பாரம்பரிய மரியாதைச் சொல்லாகும். குறிப்பாக வயதான பெண்கள் அல்லது மதிப்புக்குரிய பெண்களை அழைப்பதற்கும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

பொதுவெளியில் பெண்களின் பெயர்களைக் குறிப்பிடுவது குடும்ப கௌரவத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பழமைவாதக் கருத்தின் அடிப்படையில் இத்தகைய கட்டுப்பாடுகள் நியாயப்படுத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடைமுறை பெண்களின் தனிப்பட்ட அடையாளம், கண்ணியம் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், ஆப்கானிஸ்தானில் பெண்கள் எதிர்கொள்ளும் கட்டுப்பாடுகள் குறித்த சர்வதேச கவனத்தையும் மீண்டும் ஈர்த்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular