உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலில் இருந்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் அதிகாரி ஒருவரால் எடுத்துச் செல்லப்பட்ட அரிய பூ வேலைப்பாடுகள் கொண்ட பளிங்குக் கல் ஒன்று, எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி பிரிட்டனில் ஏலம் விடப்படவுள்ளது.
முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் கட்டப்பட்ட தாஜ்மஹால், உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகவும், யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னமாகவும் விளங்குகிறது.
இந்நிலையில், கடந்த 1816ஆம் ஆண்டு தாஜ்மஹாலில் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிழக்கிந்திய கம்பெனியின் கர்னல் பவ்னோல் பிலிப்ஸ் என்பவர், அங்கிருந்து இரண்டு பளிங்குக் கற்களை எடுத்துச் சென்றுள்ளார்.
அழகிய பூ வேலைப்பாடுகளுடன் காணப்படும் குறித்த பளிங்குக் கல்லின் வடிவமைப்பு, தாஜ்மஹாலுக்குள் அமைந்துள்ள ஷாஜஹானின் கல்லறையின் மேற்பகுதி அலங்கார வடிவமைப்புடன் ஒத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக பிலிப்ஸ் குடும்பத்தினரின் வசமிருந்த இந்த இரண்டு பளிங்குக் கற்களில் ஒன்று தற்போது ஏலத்திற்கு விடப்படவுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த ‘லயன் அண்ட் டர்ன்புல்’ ஏல நிறுவனம், இஸ்லாமிய மற்றும் இந்தியக் கலைப் பொருட்கள் பிரிவின் கீழ் எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி இந்த ஏலத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்த அரிய பளிங்குக் கல் இந்திய மதிப்பில் சுமார் 31 இலட்சம் ரூபாய் வரை ஏலம் போகும் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
