மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்கவின் கார் மீது நடத்தப்பட்ட முட்டை வீச்சு தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தனக்கு தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள அவர், இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“கலகெடிஹேனவில் நடைபெற்ற கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் நான் ஈடுபட்டதாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
கம்பஹா மாவட்டத்தில் மாத்திரமன்றி எங்கும் அரசியல் கூட்டத்தை நடத்துவதற்கான ஜனநாயக உரிமையை அங்கீகரித்து மதிக்கும் நபர் என்ற வகையில், இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணைகளை நடாத்தி, இதற்குக் காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க நான் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளேன் என்பதை வலியுறுத்துகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.