இலங்கை தடகள வீரர் ரூமேஷ் தரங்காவின் சேதமடைந்த ஐந்து ஈட்டிகளுக்குப் பதிலாக புதிய ஈட்டிகள் வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
இன்று (15) காலை விமானம் மூலம் இலங்கை திரும்பியபோது, ரூமேஷ் தரங்கா கொண்டு வந்திருந்த ஐந்து ஈட்டிகளும் சேதமடைந்து உடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ரூமேஷ் தரங்கா, 92 மீற்றருக்கும் அதிகமான தூரத்தை எறிந்து தனது திறமையை வெளிப்படுத்துவதற்காக பயன்படுத்தி வந்த ஈட்டிகளே சேதமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சேதமடைந்த ஈட்டிகளின் மொத்த பெறுமதி 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விமான நிறுவனத்திடம் தற்போது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சேதமடைந்த ஈட்டிகளுக்குப் பதிலாக புதிய ஈட்டிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உறுதியளித்துள்ளார்.
