எல்நினோ தாக்கம் காரணமாக நாட்டின் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த 8 மாவட்டங்களிலும் உள்ள 36 பிரதேச செயலகப் பிரிவுகள் வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, 47,368 குடும்பங்களைச் சேர்ந்த 154,167 பேர் எல்நினோ தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வறட்சியின் காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 35 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் 40,945 குடும்பங்களைச் சேர்ந்த 132,748 பேருக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகளவான குடிநீர் விநியோகம் மொனராகலை மாவட்டத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 13,139 குடும்பங்களின் 42,429 பேருக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 11,142 குடும்பங்களின் 33,394 பேருக்கும் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் 3 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 3,794 குடும்பங்களின் 12,047 பேருக்கும் குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
