தற்போதைய அரசாங்கம் மக்களுக்குச் சிறந்த சேவையை முன்னெடுப்பதானால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம விஜிதபுர பகுதியில் இன்று (29) இடம்பெற்ற விவசாயிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அப்போதுதான் தேர்தல் மூலம் அரசாங்கத்தின் மீது மக்களுக்குள்ள செல்வாக்கினை அறிந்துகொள்ள முடியும்.
விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர்கள், கைத்தொழிலாளர்கள் கூட மாகாண சபைத் தேர்தல் வரும் வரை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நாட்டின் புதிய பயணத்தின் புதிய பாதை, திருப்புமுனை ஐக்கிய மக்கள் சக்தி மூலமாகவே உருவாக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டில் பிரச்சினைகள் எண்ணற்ற அளவில் காணப்படுகின்ற போதிலும், அரசாங்கம் நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க முயற்சிக்கின்றது.
அரசாங்கத்திடம் மக்களின் பிரச்சினைகளுக்குப் பதில்கள் இல்லை.
இந்நாட்டின் ஜனநாயகத்தை அழித்து, நீதிமன்றத்தின் சுதந்திரத்தை அழிக்கும் வேலையையே இந்த அரசாங்கம் செய்து வருகின்றது.
நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டை பலவீனப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை அழிப்பதற்கே இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
அரசாங்கம் நீதிமன்றத்தில் தலையிட்டு அழுத்தம் கொடுத்து ஜனநாயகத்தை அழித்து நாட்டில் தனிக் கட்சி ஆட்சியை ஸ்தாபிக்கவே முற்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
