HomeTop newsஎல்-நினோ வறட்சி அச்சுறுத்தல் - அத்தியாவசிய தேவைகளைப் பாதுகாக்க ஜனாதிபதி தீவிர ஆலோசனை

எல்-நினோ வறட்சி அச்சுறுத்தல் – அத்தியாவசிய தேவைகளைப் பாதுகாக்க ஜனாதிபதி தீவிர ஆலோசனை

எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகளின் குழுக் கூட்டம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (21) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதுவரை பாதிக்கப்பட்டுள்ள எல்-நினோ நிலைமையால் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும், மக்களின் குடிநீர்த் தேவை மற்றும் ஏனைய நீர்தேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது வினவினார்.

கடந்த யால பருவத்தில் முன்னெச்சரிக்கையுடன் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக பயிர்ச் சேதங்கள் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக விவசாய அமைச்சு அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டியதுடன், மக்களின் குடிநீர்த் தேவை மற்றும் ஏனைய நீர்தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.

அத்துடன், வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல்களின்படி எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மீண்டும் முழு நாட்டிற்கும் கடுமையான வறண்ட காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில், அந்தத் தாக்கத்தினால் விவசாயம், பெருந்தோட்டத் தொழில், நன்னீர் மீன்பிடித் தொழில் மற்றும் நீர் மற்றும் மின்சார விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அந்த நிலையை எதிர்கொள்வதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது வினவினார்.

பாதிக்கப்படக்கூடிய காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைத் தடையின்றிப் பேணுவதுடன், அனர்த்தத்தால் பாதிக்கப்படும் மக்களின் பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை அவர்களைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனர்த்த முகாமைத்துவப் பிரிவுடன் இணைந்து அந்த நடவடிக்கைகளைத் திட்டமிடுமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

தற்போது பிரதான நீர்தேக்கங்களில் காணப்படும் நீர் கொள்ளளவு, தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை வழங்குவதுடன், எதிர்கால விவசாயத் திட்டங்கள் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது விசாரித்தார்.

பிரதான நீர்தேக்கங்கள், சிறு நீர்ப்பாசன மற்றும் சிறிய குளங்கள் மூலம் நீரை வழங்கும் குறிப்பிட்ட நுகர்வோர் சதவீதங்கள் குறித்த தெளிவான தரவு முறைமை இருக்க வேண்டிய அவசியத்தையும், வறண்ட காலநிலையினால் அதிகமாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதன் முக்கியத்துவத்தையும் இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நீர் வெட்டு ஒன்றை மேற்கொள்ள நேரிட்டால், நீர்தேக்கங்கள் முழுமையாக வற்றும் வரை காத்திருக்காமல், அந்தப் பகுதி மக்களுடன் பேசி முறையான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரிக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

அதேபோல், குளங்கள், ஆறுகள் மற்றும் ஓடைகள் முழுமையாக வற்றும் பகுதிகளை அடையாளம் காண வேண்டும் எனவும், அத்தகைய இடங்களில் வாழும் மக்களுக்கு குடிப்பதற்கு மாத்திரமன்றி, ஏனைய நாளாந்த தேவைகளுக்கும் நீரை வழங்க வேண்டியிருக்கும் என்பதால் அது தொடர்பான அபாயத்தைச் வரைபடமாக்கி (Map) தயாராக இருப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பயன்படுத்த முடியாத மட்டத்தில் உள்ள நீர் மூலங்களைச் சுத்திகரித்துக் கொள்ள பிராந்திய செயலாளர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

ஒக்டோபர் மாதத்தில் கிடைக்கும் முதல் மழையுடன், நீர்தேக்கங்களிலிருந்து நீர்வெளியேற்றப்படும் வரை காத்திருக்காமல், மழை நீரைப் பயன்படுத்தி நிலத்தைத் தயாரிக்கும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இதன்போது குறிப்பிட்டப்பட்டதுடன், அங்கு நீர்ப்பாசனத் திணைக்களமும் மகாவலி அதிகார சபையும் இணைந்து கூட்டுத் திட்டமொன்றின்படி செயற்பட வேண்டிய அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன், எதிர்வரும் பெரும் போகத்திற்கு தேவையான விதை நெல் மற்றும் உர விநியோகத்திற்காக நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டம் குறித்தும் ஜனாதிபதி வினவினார்.

எல்-நினோ தாக்கத்தினால் நன்னீர் மீன்பிடித் துறைக்கும் மீன் உற்பத்திக்கும் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், பாதிக்கப்படும் மீனவ சமூகத்தின் ஜீவனோபாய வழிகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை அவர்களைப் பாதுகாப்பதற்காகத் திட்டங்களைத் திட்டமிடுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

பெருந்தோட்டத் துறைக்கு ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் அந்த நிலையை எதிர்கொள்வதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் குறித்தும், வனவிலங்கு வலயங்களில் உள்ள விலங்குகளின் நீர்தேவைகளைப் பூர்த்தி செய்ய எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாகும் மழைவீழ்ச்சியின் போது உச்ச நீர் கொள்ளளவை சேகரித்துக் கொள்வதற்காக நீர்ப்பாசனக் கட்டமைப்பை உடனடியாகப் புனரமைப்புக்கு உட்படுத்த வேண்டிய அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த ஆண்டில் துண்டிப்பு ஏதுமின்றி மின்சாரத்தை வழங்குவதற்கும், அடுத்த ஆண்டு பெப்ரவரி – ஏப்ரல் காலத்தில் நீர்தேக்கங்கள் வற்றிப்போவதனால் ஏற்படக்கூடிய வலுசக்தி அபாயத்தை எதிர்கொள்வதற்காக சாதாரண தேவையை விட அதிகப்படியான உபரி மின் திறனைத் திட்டமிட்டுப் பேணுவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular