குறைந்த வருமானம் பெறும் லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் 2026ஆம் ஆண்டு முதல் வழங்கப்படவுள்ள கல்வி புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை (23) பிற்பகல் 2.00 மணிக்கு அநுராதபுரம் மாகாண சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் வைத்தியகலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
லொத்தர் சீட்டு விற்பனை மூலம் ஜனாதிபதி நிதியத்துக்குக் கிடைக்கும் நிதிப் பங்களிப்பை பாராட்டும் வகையிலும், லொத்தர் சீட்டு விற்பனையாளர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் நோக்கிலும் இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், முதலாம் தரம் முதல் உயர்தரம் வரை பாடசாலைக் கல்வியைத் தொடரும் லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகள் பயனடையவுள்ளனர்.
